புத்ராஜெயா:
‘மலேசிய குடும்பம்’ எனும் செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் உலக அரங்கிற்கும் கொண்டு செல்ல இருக்கிறார். ஐ.நா மன்றத்தின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் நாளை உரையாற்றும்போது இந்தச் செய்தியை அவர் குறிப்பிட உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளிப் பதிவாக பிரதமரின் உரை பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பொது விவாதத்தின்போது ‘உலகம் ஒரு குடும்பம்’ எனும் கருப்பொருளை பிரதமர் முன்னிலைப்படுத்துவார். மேலும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு எவ்வாறு உலகக் குடும்பத்துடன் ‘மலேசிய குடும்பம்’ இணைந்து செயலாற்றும் என்பது குறித்தும் விவரிப்பார்.
“மேலும், பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை மறு உறுதி செய்வதுடன், ஐ.நா சபை சீர்திருத்தங்கள், நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் உலகளாவிய போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் தமது உரையில் குறிப்பிடுவார்,” என வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : NAMBIKKAI