கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா)– தற்போதைய சவாலான பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சனைக்கு மத்தியில் நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்தும் புதிய இயல்பிற்கு ஏற்பவும் மலேசிய குடும்பம் செயல்பட வேண்டும்.
வேறுபாடுகளைப் பலவீனமாகக் கருதாமல் அவற்றை சாதகமாக்கி சமத்துவத்தை வலிமையின் ஆதாரமாக உருவாக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தினார்.
”ஒரு பெரிய மலேசிய குடும்பமாக அன்பு மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் ஒற்றுமையை உருவாக்கி மீண்டும் வலுப்படுத்துவோம். நாம் யாராக இருந்தாலும், தந்தை, தாய், பிள்ளை, அண்டை வீட்டார், ஊழியர், அலுவலகத்தில் தலைவர், சமூகத் தலைவர், மதத் தலைவர் அல்லது அரசியல் தலைவராக இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் மலேசிய குடும்பத்தின் நல்வாழ்வுக்காக இந்த நாட்டை மீட்டெடுப்பதில் பங்கு வகிக்க வேண்டும்,” என்றார் வலியுறுத்தினார்.
இன்று, செவ்வாய்க்கிழமை, தேசிய அளவிலான இவ்வாண்டின் மீலாது நபி தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் வளத்தையும் செழிப்பையும் அனுபவிப்பதில் எந்தவொரு மலேசிய குடும்பமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு கொள்கைகள், முயற்சிகள் மற்றும் ஊக்குவிப்புத் தொகைகளை அரசாங்கம் திட்டமிட்டு அறிமுகப்படுத்தி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டின் மீலாது நபி தினத்தின் கருப்பொருள், கருணை, அமைதி, கடவுள் பக்தி, விசுவாசம், நீதி மற்றும் மனிதாபிமானம் என்ற கொள்கைகளை வலியுறுத்துகிறது.
Source : BERNAMA